செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

பல் சொத்தை - தடுக்க



பல் சொத்தை வருவது ஏன்? தடுக்க 

வழிமுறைகள் என்ன?

முகத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான 

பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்கள், 

நம்மைத் தாக்கத் தொடங்கும். 'பல் போனால் 

சொல் போகும்' என்பார்கள் பெரியோர். 

பற்களின் 

ஆரோக்கியத்தைக் காத்தால், உடலின் 

ஆரோக்கியத்தையே பாதுகாக்கலாம் 

என்கின்றனர் மருத்துவர்கள்.

பல்லின் அமைப்பு

பல்லானது வேதி அமைப்பில் கால்சியம், 

பாஸ்பரஸ் தாதுகளால் ஆனது. ஒவ்வொரு 

பல்லிலும் வெளியில் தெரிகிற மேற்பகுதிக்கு 

மகுடம் (Crown) என்று பெயர். பல், ஈறுக்குள் 

புதைந்திருக்கும் பகுதிக்கு வேர் (Root) என்று 

பெயர். பல் ஈறின் அடிப்பாகத்திலிருந்து, 

ஒவ்வொரு பல்லுக்குள்ளும் நடுவில் 

நரம்புகளும் ரத்தக்குழாய்களும் செல்கின்றன. 

இந்தப் பகுதிக்குப் பல் கூழ் (Pulp) என்று பெயர். 

இதைச் சுற்றி டென்டைன் (Dentine) எனும் 

பகுதியும், அதற்கும் வெளியே வெள்ளை 

நிறத்தில் பல்லுக்கு ஓர் உறைபோல் 

அமைந்திருக்கும் எனாமல் (Enamel) எனும் 

கடினமான பகுதியும் உள்ளன.

பல் சொத்தை

பல் பாதிப்புகளில் முதன்மையானது, பல் 

சொத்தை (Tooth Decay). குழந்தைகள், இளம் 

வயதினர், முதியோர் என எல்லோரையும் இது 

பாதிக்கிறது. இது ஏற்படுவதற்கு முக்கியக் 

காரணம், இனிப்புகளை அதிகமாகச் 

சாப்பிடுவதுதான். குறிப்பாக, பற்களில் 

ஒட்டக்கூடிய இனிப்பு மாவுகள், பிஸ்கட்டுகள், 

மிட்டாய்கள், சாக்லேட்கள், ஐஸ்கிரீம், குக்கீஸ், 

கேக், பேக்கரிப் பண்டங்கள் போன்றவற்றில் 

உள்ள சர்க்கரைப் பொருள் பல் இடுக்குகளில் 

ஒட்டிக்கொள்ளும்போது, வாயில் உள்ள 

பாக்டீரியாக்கள் இவற்றுடன் வினைபுரிந்து, 

லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன, இந்த 

அமிலம் எனாமலை அரித்துப் பற்களைச் 

சிதைக்கிறது. இதன் விளைவால் பற்கள் 

சொத்தையாகின்றன.

பற்களைச் சுத்தமாகப் பராமரிக்கத் 

தவறினாலும் 

பாக்டீரியாக்கள் வளர்ந்து பல் சொத்தையை 

உண்டாக்கும். காபி, தேநீர் போன்றவற்றை 

அதிகமாகக் குடிப்பது, புகைபிடிப்பது, 

பான்மசாலா/வெற்றிலை பாக்குப் போடுவது 

போன்ற பழக்கங்களால் பற்களில் காரை படியும். 

இதில் பாக்டீரியாக்கள் சந்தோஷமாக வாழும். 

இந்த நிலைமை நீடித்தால், பற்களில் சொத்தை 

விழுந்து, பற்களின் ஆரோக்கியத்துக்கு வேட்டு 

வைக்கும்.

குழந்தைகள் இரவில் புட்டிப்பாலைக் 

குடித்தபடியே உறங்கிவிடுவார்கள். அப்போது 

பற்களின் மேல் பால் தங்கி, சொத்தையை 

ஏற்படுத்திவிடும். சிலருக்குப் பரம்பரை 

காரணமாகவும் பல் சொத்தை வரலாம்.

அறிகுறி என்ன?

சொத்தைப் பல்லின் ஆரம்ப அறிகுறி, பற்கூச்சம். 

முக்கியமாக இனிப்பு சாப்பிடும்போது, 

குளிர்ச்சியான அல்லது சூடான பானங்களை 

அருந்தும்போது பற்களில் கூச்சம் ஏற்படும். 

பிறகு 

பல்லில் வலி ஏற்படும். உணவை 

மெல்லும்போது பல் வலி அதிகரிக்கும். 

சொத்தைப் பல்லை ஆரம்பத்தில் 

கவனிக்காவிட்டால், எனாமலை அடுத்துள்ள 

டென்டைன் பகுதிக்கும் சொத்தை பரவிவிடும். 

அப்போது பற்களில் கறுப்புப் புள்ளி அல்லது 

கோடு தெரியும். அங்குக் குழி விழும். காய்ச்சல், 

கழுத்தில் நெறி கட்டுதல், கழுத்து வலி, காது 

வலி போன்றவையும் தொல்லை தரும். இந்த 

நிலைமையிலும் சிகிச்சை பெறாவிட்டால், பல் 

கூழ் மற்றும் வேர்களில் சீழ் பிடித்துப் 

பழுதாகிவிடும். நாளடைவில் இந்த வேர்கள் 

வலுவிழந்து போகும். அப்போது பற்கள் ஆட்டம் 

கண்டு தாமாகவே விழுந்துவிடும்.

சிகிச்சை என்ன?

முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை பல் 

சொத்தையாகிவிட்டால், ஒருவித சிமெண்டைக் 

கொண்டு சொத்தையை மூடுவார்கள் அல்லது 

அந்தப் பல்லை நீக்கிவிடுவார்கள். இப்போது 

இந்த நிலைமை மாறியுள்ளது. எந்த அளவுக்குச் 

சொத்தை பல்லில் பரவியுள்ளது என்பதை எக்ஸ்-

ரே எடுத்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். 

பல்லின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது 

என்பதைப் பொறுத்துச் சிகிச்சை மாறும்.


எனாமல், டென்டைன் வரைக்கும் சொத்தை 

இருந்தால் ‘ஃபில்லிங்’ எனப்படும் நிரப்புதல் 

சிகிச்சை போதுமானது. சொத்தையானது பல் 

கூழ்வரை சென்றிருந்தால், ‘வேர் சிகிச்சை’ 

என்று அழைக்கப்படும் ‘ரூட் கனால் சிகிச்சை’ 

(Root canal treatment) செய்யப்பட வேண்டும்.


ரூட் கனால் சிகிச்சை


இந்தச் சிகிச்சையின்போது ஈறுகளில் மயக்க 

மருந்தைச் செலுத்தி, பல் கூழ் வரை டிரில் 

செய்து 
பல்லில் ஏற்பட்டுள்ள சொத்தை, சீழைத் 

துப்புரவாக அகற்றிவிட்டு, அங்குள்ள 

நரம்பையும் வெட்டிவிட்டு, நன்றாகச் சுத்தப்படுத்துகிறார்கள். அங்கு நோய்த்தொற்று 

இல்லை என்று உறுதி செய்த உடனேயோ 

அல்லது 15 நாட்கள் கழித்தோ பல்லைச் 

சுத்தப்படுத்திய குழியில் ‘கட்டா பெர்ச்சா பிசின்’ 

(Gutta-percha resin), ஜிங்க் ஆக்சைடு, யூஜினால் 

(Eugenol) கலந்த வேதிப்பொருளைக் கொண்டு 

நிரப்புகிறார்கள். இதைத் தொடர்ந்து அந்தப் 

பல்லுக்குக் `கேப்’ போட்டு மூடிவிடுகிறார்கள். 

இதன் பலனால் சொத்தை சரியாகிவிடும். 

பல்லுக்கு உறுதித் தன்மை கிடைத்துவிடும். 

சிலருக்கு ‘ரூட் கனால் சிகிச்சை’ செய்ய 

முடியாத 

அளவுக்குப் பற்கள் மோசமாகப் 

பாதிக்கப்பட்டிருக்கும். அத்தகைய பற்களை 

நீக்கித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

செயற்கை பல்

சிலர் சொத்தை விழுந்த பல்லை எடுத்து 

விடுகின்றனர். ஆனால், பதிலுக்கு அந்த 

இடத்தில் செயற்கைப் பல்லைக் கட்டுவதில்லை. 

இது தவறு. இதனால் அருகில் உள்ள 

பற்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இந்தப் பற்கள் 

பக்கத்தில் சாய்ந்துவிடலாம். இடைவெளி 

அதிகமாகிவிடலாம். அப்போது நாக்கை அடிக் 

கடி கடித்துக்கொள்ள வேண்டி வரும். பல பற்கள் 

இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் பேச்சு குழறும்.

சொத்தையைத் தடுக்க வழி

# காலை, இரவு என இரண்டு வேளை பல் துலக்க 

வேண்டும். மேல் தாடைப் பற்களைக் 

கீழ்நோக்கிச் சுழற்றியும், கீழ்த் தாடைப் பற்களை 

மேல் நோக்கிச் சுழற்றியும் துலக்க வேண்டும். 

கடிக்கும் பகுதியை முன் பின்னாகத் துலக்க 

வேண்டும். நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும்.


# ஃபுளூரைடு கலந்த அனைத்து வகைப் 

பற்பசைகளுமே உகந்தவைதான். பல்லில் 

தேய்மானம் இருந்து, பல்லில் கூச்சம் 

ஏற்பட்டால், அப்போது மட்டும் 'டிசென்சடைசிங்' 

பற்பசையைப் பயன்படுத்தலாம்.


# பட்டாணி அளவிலான பற்பசை போதுமானது.

# கரி, உப்பு, மண், செங்கல்பொடி, சாம்பல், 

நெல்உமி போன்றவற்றால் பல் துலக்கக் கூடாது.

# பல் துலக்கியைப் பொறுத்தவரையில், 

மிருதுவான அல்லது நடுத்தர வகை 

பல்துலக்கியைப் பயன்படுத்துவது பற்களின் 

பாதுகாப்புக்கு நல்லது.

# ஆரோக்கியமான நிலைப்பற்களுக்குப் 

பால்பற்கள்தான் அஸ்திவாரம். ஆகவே, கை 

விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான 

'விரல் பல்துலக்கி'யைப் பயன்படுத்தி, ஐந்து 

வயதுவரையிலும் குழந்தைகளுக்குப் 

பெற்றோரே பல் துலக்கிவிட வேண்டும்.

# குழந்தைக்குப் பாட்டிலில் பால் 

கொடுத்தவுடன், 

ஈறுப் பகுதியைத் தண்ணீரால் நன்றாகத் 

துடைத்துவிட வேண்டும்.

# தினமும் ஒரு காரட், ஒரு வெள்ளரிக்காயைச் 

சாப்பிட்டு வந்தால், பல் சுத்தமடையும்.

# வைட்டமின் - சி, வைட்டமின் - டி, கால்சியம், 

பாஸ்பரஸ் சத்துகள் மிகுந்த மீன் எண்ணெய், 

திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, எலுமிச்சை, 

நெல்லிக்காய், பச்சையிலைக் காய்கறிகள், 

கீரைகள், பழங்கள் முதலியவற்றையும், 

புரதச்சத்து மிகுந்த பால், முட்டை, இறைச்சி, 

பயறு, பருப்பு முதலியவற்றையும் தினசரி 

உணவில் சேர்த்துக் கொண்டால், பல் ஈறுகளும் 

எனாமலும் நல்ல வளர்ச்சி பெறும்.

# பற்களில் ஒட்டிக்கொள்ளக் கூடிய இனிப்பு 

மாவு, சாக்லேட், மிட்டாய், ஐஸ்கிரீம் 

போன்றவற்றைச் சாப்பிட்டால் உடனே வாயைக் 

கொப்பளிக்க வேண்டும்.

# காபி, தேநீர் உள்ளிட்ட அதிகச் சூடான உணவு 

கைகளையும், ஐஸ்கிரீம் உள்ளிட்ட அதிகக் 

குளிர்ச்சியுள்ள உணவு வகைகளையும், குளிர் 

பானங்களையும் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

# வெற்றிலைப் பாக்கு போடுவது, புகைபிடிப்பது, 

பான்மசாலா பயன்படுத்துவது, மது அருந்துவது 

போன்றவற்றைத் தவிர்த்தால், பல்லுக்குப் 

பாதுகாப்பு கிடைக்கும்.

# குண்டூசி, குச்சி போன்றவற்றால் பல் 

ஈறுகளைக் குத்தி அழுக்கு எடுக்கக்கூடாது.


# குளிர்பானங்கள் குடிப்பதைக் 

குறைத்துக்கொள்வது பற்களுக்கு நல்லது. 

காரணம், அவற்றில் உள்ள அமிலங்கள் 

எனாமலை தாக்கிப் பற்களையும் 

சிதைக்கின்றன.

# குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் 

இருந்தால், சிறு வயதிலேயே அதைத் தடுத்து 

விட வேண்டும். தவறினால், சொத்தைப் பற்கள் 

மட்டுமல்ல தெற்றுப் பற்களும் தோன்றக்கூடும்.

# தினமும் பால் அருந்துங்கள். அதிலுள்ள 

கால்சியம் பல்லுக்குப் பாதுகாப்பு தரும்.

# நகம் கடிக்கக் கூடாது. காரணம், அதன் மூலம் 

கிருமிகள் வாய்க்குள் சென்று நோய்களை 

உண்டுபண்ணும்.

# ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் 

மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் 

பழக்கத்தைப் பின்பற்றினால், பற்சொத்தை 

உள்ளிட்ட பல்வேறு பல் பிரச்சினைகளை ஆரம்ப 

நிலையிலேயே தவிர்த்துவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக